Ms Sushma Soma, NIE music lecturer emerged as one of the Young Artist Award recipients
NIE music lecturer Ms Sushma Soma is one of the Young Artist Award recipients who is counting her blessings in the pandemic year.
இந்த ஆண்டுக்கான இளங்கலைஞர் விருதைப் பெற்ற நான்கு வளரும் கலைஞர்களில் கர்நாடக இசைக் கலைஞர் சுஷ்மா சோமசேகரும் ஒருவர்.
சிங்கப்பூரின் மிக உயரிய கலை, இலக்கிய விருதான கலாசார பதக்கம், பாத்திக் ஓவியக் கலைஞரான 80 வயது திரு சர்காசி, பல்லூடக ஓவியக் கலைஞரான 59 வயது டாக்டர் வின்சென்ட் லியாவ் ஆகிய இருவருக்கும் இவ்வாண்டு வழங்கிச் சிறப்பிக்கப்பட்டுள்ளது.
அனைத்துலக அங்கீகாரம் பெற்ற கலைஞரான 33 வயது திருமதி சுஷ்மா, ஆய்வாளர், கல்வியாளர், எழுத்தாளர் என பல பரிமாணங்களைக் கொண்டவர். ஐந்து வயது முதல் வாய்ப்பாட்டு இசையில் ஈடுபட்டுள்ள இவர், சென்னையில் ‘தி மெட்ராஸ் மியூசிக் அகெடமி’, ‘தி பவன் லண்டன்’, பிரசல்சிலுள்ள இந்திய தூதரகம் போன்ற இடங்களில் கச்சேரி செய்த பெருமையைப் பெற்றவர்.
“கர்நாடக இசைக்கலைக்கு அங்கீகாரமும் மரியாதையும் கிடைக்கும் விதமாக இந்த விருது அமைந்துள்ளது,” என தமிழ் முரசிடம் கூறிய சுஷ்மா, தம்மை ஒரு சிறந்த கலைஞராக உருவாக்கிய தமது குடும்பத்தினருக்கும் குரு ஆர் கே ஸ்ரீராம் குமார், பாக்யாமூர்த்தி ஆகியோருக்கும் நன்றி தெரிவித்தார்.
கணக்கியல் துறை பட்டதாரியான சுஷ்மா, இசை மீது கொண்ட ஆர்வத்தினால் முழு நேரக் கலைஞராக பரிணமித்து வருகிறார்.
ஓவியக் கலைஞர் டாக்டர் யான்யுன், 34, ஆங்கில மலாய் நாடகக் கலைஞர் இர்ஃபான் கஸ்பான், 33, திரைத்துறைக் கலைஞர் நிக்கல் மிடோரி ஊட்ஃபர்டு, 34, ஆகியோர் இவ்வாண்டு இளங்கலைஞர் விருது பெறும் ஏனையவர்கள்.
சிங்கப்பூரில் இளம் கலைஞர்களை ஊக்குவித்து வளர்க்கும் நோக்கில் 1992ல் தொடங்கப்பட்ட இந்த தேசிய விருதை இவ்வாண்டுடன் 163 பேர் பெற்றுள்ளனர். நிகழ்கலைக் கலைஞர் டாக்டர் எஸ்.சந்திரசேகரன், நடனக் கலைஞர்கள் நிர்மலா சேஷாத்திரி, மீனாட்சி பாஸ்கர், தமிழ்வாணன் விஷ்ணு, இசைக் கலைஞர்கள் கானவினோதன் ரத்னம், அரவிந்த் குமாரசாமி ஆகியோர் இவ்விருதைப் பெற்ற ஏனைய தமிழ்க் கலைஞர்கள். உன்னத கலை ஆற்றல் பெற்ற 35 வயதும் அதற்கும் குறைந்தவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
சிங்கப்பூரில் கலை, கலாசார மேம்பாட்டுக்கு பங்களித்த தலைசிறந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் கலாசார பதக்கம் 1979ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை 128 கலைஞர்கள் இவ்விருதைப் பெற்றுள்ளனர்.
இதே பகுதியைச் சேர்ந்த மற்ற செய்திகள்
Read the original article here.
Source: Tamil Murasu © SPH Media Limited. Permission required for reproduction.